நீரின்றி அமையாது உலகு
மாமன்னன் ராஜராஜனின் 1041வது சதய விழாவில் ‘தண்ணீரும் தன்னிகரற்ற மன்னன் ராஜராஜனும்’ என்கிற தலைப்பில் பேசினேன்.View quoted post on X
“நிழல் விழாத கோபுரம், 80 டன் எடை கொண்ட ஒரே கல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பாமல், மாமன்னன் ராஜராஜன் நீர் மேலாண்மையில் காட்டிய தீவிரத்தைப் பேசுங்கள். ஏராளமான நீர் நிலைகளை உண்டாக்கி வானம் பொய்த்தாலும் பூமி செழிக்கும் சூழலைச் செய்து காட்டியவன் ராஜராஜன். எளிய வருமானம் கொண்ட வீட்டில் ஒரு தாய் எப்படி பணத்தை அரிசிப் பானை, கடுகு டப்பா, ட்ரங்கு பெட்டி, சுருக்குப்பை எனப் பல இடங்களில் சேமித்து வைத்து நெருக்கடியைச் சமாளிக்கிறாளோ, அதைப்போல் பெய்கிற மழையை ஏரி, குளம், குட்டை, ஊரணி, கண்மாய் எனப் பல்வேறு வடிவங்களில் பாதுகாத்து வைத்தவன் ராஜராஜன். போரில் காட்டிய ஆர்வத்தைக் காட்டிலும் அவன் நீரில் காட்டிய அக்கறை அதிகம். ஒரு பயிரின் சல்லி வேர்களைப் போல் நம் மண்ணின் கடைக்கோடி வரை கிளை வாய்க்கால்கள் நீள அவனே காரணம். வயல்களில் நாம் நடுகிற நாற்றுக்கும், நாம் உண்ணுகிற ஒவ்வொரு கவளச் சோற்றுக்கும் மாமன்னன் ராஜராஜனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘நீரைக் காக்க யார் அக்கறை காட்டுகிறார்களோ… அவர்களின் பாதங்களை என் தலையில் சுமக்கவும் நான் தயார்’ என்றான் ராஜராஜன். அவனுடைய வாரிசுகளாக, வம்சாவழிகளாக வந்த நாம் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்? குளம், குட்டைகளைத் தூர்க்கிறோம். ஏரிகளில் வீடு கட்டுகிறோம். நீர் நிலைகள் யாவையும் ஆக்கிரமிக்கிறோம். பணம் கொடுத்து பாட்டில்களில் நீர் வாங்கிக் குடிக்கும் நிலை வந்த பிறகும் நீர் மேலாண்மையில் நாம் இவ்வளவு பின்தங்கி இருக்கலாமா? பெரிதாக ஒன்றுமில்லை… சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர்க் குழாயை இறுக்கமாக மூடுவதுகூட நீங்கள் ராஜராஜனுக்குச் செய்யும் நன்றிக் கடன்தான்!” எனப் பேசினேன்.
நேர நெருக்கடியால் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியாமல் போய்விட்டது. அது: “மழை நீர் சேகரிப்பு, இலவச ஆடு, மாடு உள்ளிட்ட திட்டங்களை ராஜராஜன் செயல்படுத்தினான். அவற்றைப் பின்பற்றித்தான் இப்போதைய அரசுகளும் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. அதைப்போல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஏரி வாரியம்’ அமைத்து நீரைக் காத்தவன் ராஜராஜன். அதைப் பின்பற்றி ஏரி வாரியத்தை அமைத்து அதில் நீராதாராங்களைக் காக்கவும் மீட்கவும் போராடுகிற தம்பி நிமல் ராகவன் போன்றோரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்”
சதய விழா நடந்த இரு நாட்களும் பெருமழை பெய்யாமல் அட்சதை போடுவதைப் போல் அவ்வப்போது தூறல் போட்டது வானம். நீர் காத்த மன்னனின் பிறந்த நாளுக்கு வானம் சொன்ன வாழ்த்து அது!